அகத்தியர் வழிபட்ட இறைவன் தாலபுரீஸ்வரர். தாலம் என்பது பனைமரம். பனை மரத்தின் அடியில் எழுந்தருளியதால் இந்தப் பெயர். பனங்காட்டுநாதர், பனங்காட்டீசர் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு. திருப்பனங்காட்டு நாதர், ஆளுடையார் பனங்காடுடை நாயனார், திருப்பனங்காடுடை அன்புடைய நாயனார் என்றெல்லாம் இவருக்குக் கல் வெட்டுத் திருநாமங்களும் உள்ளன.
புலத்திய முனி வழிபட்ட இறைவன் கிருபா நாதேஸ்வரர். புலத்தியர் யார்?
நமது புராணங்களில் உயர்வான இடத்தைப் பெறுகிற மாமுனிவர்களில் புலத்தியரும் ஒருவர். பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் ஒருவரான புலஸ்தியர் (இதுவே தமிழில் புலத்தியர் ஆனது), பிரஜாபதிகளுள் ஒருவர்; சப்தரிஷிகளில் ஒருவர் (சித்திரை-வைகாசி மாதங்களில் வடக்கு வானத்தின் கீழ்ப்பகுதியில் சப்தரிஷி மண்டலத்தைத் தேடுவோமே... அதில் புலத்தியரும் இருக்கிறார்).
புலத்தியரின் பெருமைகள் ஏராளம். தாமே கிருஷ்ணராக அவதாரம் எடுப்பதற்கு முன்னர், தமது பரமபத லோகத்தில் இருந்து விரஜா நதியை யமுனையாகவும், கோவர்த்தன மலையை கிரிராஜனாகவும், பூலோகத்துக்கு பரம்பொருள் அனுப்பி வைத்தார். சால்மலி பகுதியில் (மேற்குக் கடற்கரையைத் தாண்டி), ஒரு தீவில், துரோணர் எனும் மலையரசனின் மகனாகத் தோன்றி இருந்தது கோவர்த்தனம். மிக உயரமாகவும் அகலமாகவும் இருந்த கோவர்த்தனத்தின் அழகைச் சொற்களால் வர்ணிக்க முடியாது.
இதன் அழகையும் பெருமையையும் கேள்விப்பட்ட புலத்தியர், காசியில், தான் நடத்தும் யாக பூஜையில், கோவர்த்தனத்தின் புனிதமும் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். துரோணரிடம் அனுமதி கேட்டார். தந்தை அனுமதி கொடுத்த பின்னரும், மகன் கட்டளைகள் போட்டான். முனிவர் தமது உள்ளங்கையில் தன்னைக் கொண்டு போக வேண்டும் என்றும், எங்காவது கீழே வைத்தால் அப்படியே தங்கிவிடுவதாகவும் கோவர்த்தனம் கட்டளை இட்டது.
இதற்கு ஒப்புக் கொண்ட புலத்தியர், கோவர்த்தனத்தைக் கையில் தாங்கிப் புறப்பட்டார். விரஜா... அதாவது யமுனை பகுதியைக் கடக்கும்போது, அங்கேயே தங்கி கிருஷ்ண சேவை யில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்ட கோவர்த்தனம், உள்ளங் கையில் இருந்தபடியே எடை கூடத் தொடங்கியது. கனம் தாங்காமல் புலஸ்தியர் மலையைக் கீழே வைக்க, அசையாமல் அங்கேயே அமர்ந்து கொண்டது கோவர்த்தனம். வந்தது புலத்தியருக்குக் கோபம்... 'இங்கேயே இருந்து கொள்; ஆனால், உனது உயரமும் பருமனும் உனக்குக் கிடைக்காது. குட்டையாகத்தான் இருப்பாய்!' என்று சாபம் கொடுத் தார். இப்போது கோவர்த்தனகிரி (கிருஷ்ணர் தூக்கியபோதும்கூட), தனது அசல் அளவுகளில், பாதியளவுதான் உள்ளதாம். எல்லாம் புலத்தியர் மகிமை! நைனிதால் பகுதியில் உள்ள 'திரி ரிஷி' என்ற ஏரியானது அங்கு அமைவதற்கும் புலத்தியரே காரணம் ஆவார்.
இத்தகைய மகிமையெல்லாம் சரி; இவை யாவும் வடநாட்டில்தாமே, தென்னாட்டில் எங்கே புலத்தியர் என்கிறீர்களா? பொறுங்கள். புலத் தியர் வருகிறார்.
புலத்தியர், ராவணனின் தாத்தா. புலத்தியருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அகத்தியர்; மற்றவர் விஸ்ரவா. விஸ்ரவாவுக்கு, இத்விதா எனும் முனி குமாரத்தி மூலமாகப் பிறந்த மகன் குபேரன்; கேகசி எனும் மற்றொரு மனைவி மூலமாகப் பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன் ஆகியோர்.
புலத்தியர், தன் மகனான அகத்தியர், பனங்காட்டுடையாரை வழிபட்ட இடத்துக்கு வந்தார். அங்கே சுயம்பு லிங்கமாக சுவாமி எழுந்தருளியிருப்பதை அகத்தியர் தெரிவித்திருந்தார். தானும் அந்தச் சுயம்புவை வழிபடலாம் என்று வந்தார். சுற்றிச் சுற்றித் தேட... ம்ஹும். சிவலிங்கத் திருமேனி எங்கேயும், தென்படவே இல்லை. தவித்துப் போன புலத்தியர், 'அவன் அருளாலேயே அவன் தாள்' வணங்க முடியும் என்பதை உணர்ந்து, தானே ஒரு லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவ்வாறு அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவரே கிருபாநாதேஸ்வரர்.
புலத்தியர் இங்கு வழிபட்டது பற்றியதான இந்தச் செவிவழிக் கதை, கிருபாநாயகியான அம்பிகை தாம் முதலில் மனமிரங்கி, தாலபுரீஸ் வரரைப் புலத்தியருக்குக் காட்சி கொடுக்கும்படி சொன்னதாகவும் தெரிவிக்கிறது. அருள் காட்டியதால், கிருபாநாதேஸ்வரர் மற்றும் கிருபாநாயகி.
எப்படியோ, முனிவர்கள் மற்றும் மகான்களுடன் இறைவன் இப்படி யெல்லாம் விளையாடியதால், நமக்கு லாபம். அருள்மிகு கிருபாநாதேஸ்வரர் முன்னால் நிற்கிறோம். சந்நிதி அமைப்பு, தாலபுரீஸ்வரர் சந்நிதி அமைப்பு போன்றே உள்ளது. துவாரவாயிலில் ஒரு சிறப்பு. துவார பாலகர்கள் இருக்கிறார்கள்; பின்னே, சுவரில் அவர்களின் வண்ண ஓவியங்களும் உள்ளன. பழைய ஆவணங்களில், ஓவியங்கள் மட்டுமே உள்ளனவாகக் குறிப்புகள் உள்ளன. இப்போது துவாரபாலகச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. சமீபகாலத் திருப்பணிகளாம். இந்தக் காலகட்டத்திலும், இப்படிப்பட்ட திருப்பணிகள் நடைபெறுகின்றன என்பதைக் கேட்கும்போது, நெஞ்சம் நிறைகிறது.
ஸ்நபன மண்டப நந்தியைத் தாண்டி பார்வை யைச் செலுத்துகிறோம். அருள்மிகு கிருபாநாதேஸ் வரர். சதுர பீட ஆவுடையாரில், சற்றே குட்டையான பாணம்.
காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து பற்பல தலங்களை தரிசித்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அப்போது, வன்பார்த்தன் பனங்காட்டூருக்கும் வந்தார். இங்குள்ள பெருமானை தரிசிக்காதாரைப் பற்றி என்ன சொல்வது என்று பதிகம் பாடினார்.
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானைஅடையில் அன்புடையானை யாவர்க்கும் அறிவொண்ணாமடையில்வாளைகள் பாயும் வன்பார்த்தன் பனங்காட்டூர்சடையில் கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே
இரண்டு சுவாமிகளையும் வணங்கி, மூலவர் சந்நிதிகளை வலம் வருகிறோம். இரண்டு சந்நிதிகளுக்கும் சேர்த்து, ஸ்நபன மண்டப உயரத்திலேயே மேடை போன்ற அமைப்பு உள்ளது. தாலபுரீஸ்வரரின் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை. இந்தச் சந்நிதிக்கு சண்டேஸ்வரர் இல்லை. கிருபாநாதேஸ்வரரின் கோஷ்டத்தில் விநாயகர் இல்லை. தட்சிணாமூர்த்தி அழகோ அழகு. வலக் காலைத் தொங்க விட்டுக் கொண்டு இடக் காலைக் குத்துக் காலிட்டுக் கொண்டிருக்கிறார்; சின்முத்திரையும் புத்தகச் சுவடியும் தாங்கி, சின்னப் புன்னகையோடு அருள் பாலிக்கிறார். கிருபாநாதேஸ்வரரின் மேற்குக் கோஷ்டத்தில் மகா விஷ்ணு, வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மா. இந்தச் சந்நிதிக்கான சண்டேஸ்வரர், தனி மண்டபத்தில் உள்ளார். வலம் வந்து சுவாமி சந்நிதிகளை மீண்டும் வணங்கி நிற்கிறோம்.
சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளின் முகப்புப் பகுதிகள் மற்றும் உள் பிராகாரத்தின் கிழக்குச் சுற்றுப் பகுதி ஆகிய யாவும் சேர்ந்து, ஒரு பெரிய மண்டபம் போலவே தோற்றம் தருகின்றன. இந்த மண்டபத்தின் தூண்கள் வெகு சிறப்பானவை. இவற்றில் காணப்படும் அழகழகான சிற்பங்கள், தமிழகத்தின் கட்டுமானச் சிறப்புக்கு அத்தாட்சிகளாகத் திகழ்கின்றன.
மூன்று நிலை கோபுர உள் வாயிலைக் கடந்து வந்தோமில்லையா? வாயிலுக்கு வெளியில் தூண் ஒன்றில், கையில் வில்லுடன் ராமர் நிற்கிறார். மண்டபத்தின் உள்ளே, கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்பாக, மற்றொரு தூணில், இரண்டு குரங்குகள் மற்போர் செய்கின்றன. வேறு யார்? வாலியும் சுக்ரீவனும்தாம்! இதில் என்ன சிறப்பு தெரியுமா? ராமர் தூணிலிருந்து பார்த்தால், வாலி- சுக்ரீவன் தெரிவார்கள்; ஆனால், வாலி- சுக்ரீவத் தூணிலிருந்து பார்த்தால், ராமர் தெரிய மாட்டார்!
தாலபுரீஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் இருபுறமும், ஒரு தூணில் ஞானசம்பந்தர்- அப்பர் பெருமான்; இன்னொரு தூணில் சுந்தரர்- மாணிக்கவாசகர். அடுத்துள்ள ஒரு தூணில் ஏகபாத மூர்த்தி; அதே தூணின் இன்னொரு புறத்தில் கருடன். இவருக்கு எதிர்த்தூணில் வேணு கோபாலனாகக் கண்ணன்.
கிருபாநாயகி சந்நிதியின் எதிரில் நாகலிங்கம், தாலபுரீஸ்வரர் சந்நிதியின் எதிரில் புருஷாமிருகம், கிருபா நாதேஸ்வரர் சந்நிதியின் எதிரில் யோக தட்சிணாமூர்த்தி, பற்பல தூண்களில் அனுமன், பூதகணங்கள், கிளிகள், சிங்கங்கள், யாளிகள், முட்டையில் இருந்து பொறிந்து வரும் குஞ்சு... இப்படியாகப் பலவிதமான சிற்பங்கள்; ஒவ்வொன்றும் ஒரு கலைக் கருவூலம்.
மண்டபத்தையும் சிற்பங்களையும் பார்த் துக் கொண்டே அம்பாள் சந்நிதிகளை அடை கிறோம்.
கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கும் உள்வாயிலுக்கும் இடையில், தெற்கு முகமாக அடுத்தடுத்து இரண்டு சந்நிதிகள். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியை அடுத்து இருப்பது அமிர்தவல்லி அம்மன் சந்நிதி; இவர் தாலபுரீஸ்வரரின் திருவாட்டி. உள்வாயிலுக்கு அருகில் இருப்பது கிருபாநாயகி அம்மன் சந்நிதி; இவர் கிருபாநாதேஸ்வரரின் திருவாட்டி. இருவரும் நான்கு திருக்கரங்களும் அபயவரதமும் கொண்டு, நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
'தண்ணார் மாமதிசூடித் தழல் போலும்
திருமேனிக் கெண்ணார்நாண் மலர்கொண்டு அங்கிசைந்தேத்தும் அடியார்கள்பண்ணார் பாடலறாத படிறன் தன் பனங்காட்டூர்பெண் ஆணாய பிரானைப் பேசாதார் பேச்சென்னே'
- என்று அம்மையும் அப்பனுமாக இறைவன் காட்சி தருவதையே சுந்தரரும் பாடுகிறார். ஐயனின் அருள் சக்தியாக விளங்கும் அம்மையை (இரண்டு அம்பாள் திருமேனிகளை) வணங்குகிறோம். இரண்டு சந்நிதிகளுக்கும் இடையில் பள்ளியறை.
சுவாமி- அம்பாளை தரிசித்து நிற்கிறோம். உள் மண்டபத்தில் உள்ள ஒருவரை நாம் கண்டே ஆக வேண்டும். யார்?
தாலபுரீஸ்வரர் சந்நிதிக்கு முன்னால் உள்ள தூண் ஒன்றில், சுவாமியைக் கைகூப்பி வணங்கிக் கொண்டே இவர் நிற்கிறார். இந்தத் திருக்கோயில் திருப்பணிகளைச் செய்வித்து 1929-ல் கும்பாபிஷேகம் நடைபெற காரணமாக இருந்த தேவகோட்டை நகரத்தார் பெருமகன் திருவாளர் ஏகப்பச் செட்டியார்தான் இவர்! இவர் மட்டுமல்லாமல் இவரின் வழித்தோன்றல்கள் இன்றளவும் ஆலயப் பணிகளைச் செவ்வனே செய்து, கோயிலைத் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.
திருப்பனங்காடு திருக்கோயிலுக்கு முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன் முதலான சோழர்களும், விஜயநகர அரசர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
சக ஆண்டு 1303-ல் (சுமார் கி.பி.1381 வாக்கில்) குளம் உடைப்பெடுத்து, கோயில் நிலங்கள் தரிசாகினவாம்; கோயில் நிலங்கள் சிலவற்றை விற்று உடைப்பைச் சரி செய்தார்களாம். இவ்வூருக்கும் கோயிலுக்கும், கண்ணப்ப நாயனார் (ஆமாம், பொத்தப்பி நாட்டுத் திண்ணன்) பரம்பரையினர் சிலர் நிவந்தங்கள் வைத்திருந்தனர்.
கோயிலை விட்டு வெளியே வருகிறோம். எதிரில் கோட்டை முனீஸ்வரர் ஆலயம். இவர்தாம் இந்த ஊரின் ஆதி தெய்வம் என்கிறார்கள். யோகானந்த முனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிற இவர், யோகாசன நிலையில் அமர்ந்து, இடக் கையைத் தொடைமீது வைத்துக் கொண்டும், வலக் கையில் ருத்ராட்ச மாலையை ஏந்திக் கொண்டும், சடாமுடிதாரியாக, வடக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு முன்னே, ஒரு புறம் துவார விநாயகர்; இன்னொரு புறம்... இடக் காலில் யோக பட்டம் கட்டிக் கொண்டு யானை மீது அமர்ந்த ஐயப்பன். சிறியதாக உள்ள முனீஸ்வரர் கோயிலுக்கு அருகில் வன்னி மரம். மரத்தடியில் நாகரும் லிங்கமும். அகத்தியர் வழிபட்ட காலத்தில், இந்த முனீஸ்வரர், பனம் பழங்களை உதிரச் செய்தாராம். அவற்றை இறைவனுக்கு அகத்தியர் படைத்தார். இந்த வழக்கப்படி, இப்போதும், பனம்பழம் கிடைக்கும் காலங்களில் சுவாமிக்கு நைவேத்தியம் உண்டு. இன்னும் சற்று வடக்காக, குளத்துக்கு எதிரே சனீஸ்வரர் சந்நிதி உள்ளது.
இயற்கை அழகு கொஞ்சும் சூழலில் மிக அமைதியாக உள்ள திருக்கோயிலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர முயற்சிக்கிறோம். உள்ளூர்க்காரர் ஒருவர் விசாரிக்கிறார்: “சுந்தரர் கிணத்த பாத்தீங்களா?”
அதென்ன சுந்தரர் கிணறு? ஊரின் தொடக்கத்தில் சற்றே உள்ளடங்கி உள்ள ஒரு சிறிய ஊற்று. அதற்குத்தான் இந்தப் பெயர். காரணம்?
சுந்தரர் இந்த ஊருக்கு வந்தபோது, அவருக்கு தாகம் எடுத்ததாம். அவருக்குத் தண்ணீர் வேண்டும் என்பதற்காக... இறைவன், எருதாக வந்து தமது காலால் கீறி ஊற்றை ஏற்படுத்தினார். அதுவே ஊற்றுத் தீர்த்தம் அல்லது ஊற்றங்குழி. இறைவன் கட்டுச் சாதம் கொண்டு வந்து சுந்தரருக்கு உணவளித்து, அப்போது தண்ணீருக்காக இவ்வாறு செய்ததாகவும், சிலர் சொல்கிறார்கள். இந்தக் கதை பெரிய புராணத்தில் இல்லை. செவிவழிச் செய்தியே.
திருப்பனங்காடு, பனைமரத்தைத் தல மரமாகக் கொண்ட ஐந்து திருத் தலங்களில் ஒன்று. திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவத்திபுரம் (செய்யாறு), புறவார் பனங்காட்டூர், வன்பார்த்தன் பனங்காட்டூர் ஆகியவையே இந்த ஐந்து.
வன்பார்த்தன் பனங்காட்டூர் கோயிலுக்கு உள்ளே, வெளிப் பிராகாரத்தில், பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு பனை மரங்கள் உள்ளன என்று பார்த்தோம் இல்லையா? ஒன்று ஆண் பனை; மற்றொன்று பெண் பனை. இரண்டும் ஒரே மரத்தின் விதையிலிருந்தே முளைத்தனவாம். இருந்தாலும், ஒன்று ஆணாகிவிட்டது; மற்றது பெண்ணாகிவிட்டது என்கிறார்கள். கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் உள்ள பனை மரங்களே ஆதி தலமரங்கள்.
இறைவனின் அற்புத விளையாடல்களையும் இறையன்பர்களின் இடையறாத பேரன்பையும் எண்ணிக் கொண்டே விடை பெறுகிறோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment